என்றும் எங்கள் நினைவில்...பகுதி 2

Thursday, December 5, 2013

இந்த டிசம்பர் 22,23, 1949 இல் தான் பாபரி மஸ்ஜித்-உள்- இரண்டு சிலைகள் வைக்கப்பட்டன.
       இன்றளவும் 1949 (22-23) இரவில் சிலை வைத்தவர்கள் திடுதிப்பென்று யாரும் அறியாமல் சிலையை வைத்து விட்டார்கள் என்றே மக்களிடம் கூறி வந்தார்கள். பல ஆய்வாளர்களும் இதையே கூறிவந்தார்கள். நீதி மன்றங்களிலும் இதுவே கூறப்பட்டு வந்தது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோர் இப்படியே நம்பியும் எழுதியும் வந்தார்கள்.   ஆனால் அன்று நிகழ்ந்தவை திடு திப்பென நடந்தவை அல்ல. மாறாக, அவை, திட்ட மிட்ட சதியே.

       எனினும் இப்போது பல அந்தரங்கமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன, அவற்றையும் இங்கே தருகின்றோம் ஆனால் இந்துத்துவா வாதிகள் இன்றளவும் அந்த சிலைகள் தானாகத் தோன்றியவை எனக்கூறி வருகின்றார்கள். 1949 டிசம்பர் 22, 23க்கு முன்பே சிலைகளை பாபரி மஸ்ஜித்- இன் உள் சிலைகளை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற உளவுத் தகவலும் அரசுக்குத்தரப்பட்டன. அரசு தான் அவற்றை உதாசீனப்படுத்தியது வேண்டுமென்றே சிலைகளை வைப்பதற்கு உதவி செய்தது. அந்த உதவியை நடவடிக்கைகள் எடுக்காமலிருந்ததன் மூலம் செய்யப் பட்ட உதவி எனலாம்.
       ஆமாம் ஓர் அநியாயம் நடக்கப் போகின்றது என்பது தெரிந்த பின்பும் அதைத் தடுக்காத இந்திய அரசு அன்றே ஒரு பெரும் துரோகத்தைச் செய்து விட்டது.
       இங்கே ஆய்வாளர்கள் அனைவரும் மூத்த வழக்கறிஞர்களும் ஒரு விவகாரத்தில் மிகவும் மனமொடிந்து போய் நிற்கின்றார்கள். அந்த விவகாரம், அலஹாபாத் நீதிமன்ற விவகாரந்தான். அஹர்வால் என்ற நீதிபதியின் 5019 பக்கங்களும், நீதிபதி வர்மாவின் 1130 பக்கங்களும். வரலாற்றைப் புரட்டிப்போடும் 1949 நிகழ்வைப் பற்றி நான்கு வார்த்தைகளைத் தாம் சொல்லுகின்றனர்.
       நீதிபதி எஸ்.யூ கானின் தீர்ப்பு மட்டுந்தான், 1949 டிசம்பர் 22-23 இல் மஸ்ஜித் - இன் உள் சிலை வைக்கப்பட்ட விவகாரம் பற்றி சற்று விரிவாகப் பேசுகின்றது.
       இதனால் அனுபம் குப்தா அவர்கள் நீதிபதி அஹர்வால் நீதிபதி வர்மா ஆகியோரின் தீர்ப்புகளை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டெறிவதற்கு இது ஒன்றே போதும் என்கின்றார்கள்.அத்வானியிடம் கேட்ட கேள்வி:
       அடுத்து - 1949 - இல் சிலைவைக்கப்பட்ட நிகழ்வு, யாருடைய ஏற்பாடுமல்ல, அந்தச் சிலைகள் தாமாக பாபரி பள்ளிவாசலுக்குள் தோன்றியவை என உலகப் புகழ் பொய்யர் அத்வானி பிதற்றி வந்தார்.
       அவர்- அத்வானி- லிபர்கான் கமிஷன் முன் தோன்றினார். விசாரணைக்காக,
       அந்த விசாரணையின் போது லிபர்கான் கமிஷனின் அதிகாரப் பூர்வமான வழக்கறிஞர் அனுபம் குப்தா அவர்கள் அத்வானியிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்.
       "அறிவும், விஞ்ஞானமும் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், இப்படியொரு நிகழ்வு, அதாவது சிலைகள் தாமாக மஸ்ஜித்துக்குள் வந்த நிகழ்வு நடந்திருக்கும் என நீங்கள் நம்புகின்றீர்களா? உங்களுடைய பகுத்தறிவு அதை எற்றுக் கொள்கின்றதா?
       இந்தக் கேள்விக்கு அத்வானி எந்தப் பதிலையும் சொல்லவில்லை எனவே மீண்டும் ஒரு முறை இதே கேள்வியைக் கேட்டார் அனுபவம் குப்தா.
       ஆனால் நீதிபதி லிபர்கான் புகுந்து அத்வானியை இப்படி இக்கட்டான சூழ்நிலைகளுக்கு ஆளாக்காதீர்கள் எனக் கூறி விட்டார்கள்.
       இப்படி அத்வானியைக் காப்பாற்றினார் நடுநிலையோடு நடந்திட வேண்டிய நீதிபதி லிபர்கான்.
       அனுபம் குப்தா - அத்வானியே இதை நம்பிடவில்லை - அதாவது சிலைகள் தாமாகத் தோன்றின என்பதை நம்பவில்லை - என்று நீதிபதி பதிவுப் புத்தகங்களில் லிபர்கான் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதையும் செய்ய லிபர்கான் மறுத்து விட்டார்.
       ஆக இந்துத்துவ வாதிகளே நம்பாதவை இந்தியாவில் நாட்டு நடப்பாக ஆகிவருகின்றது.
அன்றைக்கிருந்த அரசின் நடவடிக்கைகள்..?
    
   அன்று 1949 - இல் இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள். சிலைகளை அகற்றிட வேண்டும். என்றொரு கடிதத்தை உத்திரபிரதேச முதல்வருக்கும் தலைமை செயலாளருக்கும் எழுதினார் என்பதை இதுவரை எழுதிவந்தோம்.
       பன்டித நேரு அவர்களின் கடிதம் அப்போதைய கவர்னர் ஜெனரல் இராஜகோபால ஆச்சாரிய்யா அவர்களுக்கும், மத்திய பிரதேச முதலமைச்சர் ஜி.பி. பந்த் (கோவிந்த் பாலாஹ் பந்த்), அவர்களுக்கும் அனுப்பப்பட்டது. இவர்களின் செயலாளர்கள் சிலைகளை அகற்றிடும்படி பைஜாபாத் மாஜிஸ்ரேட் கே.கே.கே. நய்யார் என்பவருக்கு ஆணை இட்டார்கள். நய்யார் சிலைகளை அகற்றிடவில்லை என்பது மட்டுமல்ல, அவற்றிற்கு பாதுகாப்பு வழங்கினார்.
       மீண்டும் சிலைகளை அகற்றிடும் படி ஆணை இட்ட போது, அவர் சொன்ன பதில் வரலாற்றில் மறைக்கப்பட்டே வந்திருக்கின்றது. அவர் சொன்ன பதில். "சிலைகளை மஸ்ஜித் உள்ளிருந்து அகற்றிட முடியாது, என்னை வேண்டுமானால் அகற்றுங்கள்".
       பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், தன்னுடைய கடிதம் முழுவதும் சிலைகள் வைக்கப்பட்டதை ஒரு குற்றம் என்றே குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் சிலைகளை அகற்றிட தவறியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
       கிரிமினல் குற்றம் ஒன்றுக்கு துணை போனவர், பிரதமரின் ஆணையைப் புறந்தள்ளியவர், என்னை வேண்டுமானல் அகற்றிக் கொள்ளுங்கள் என ஆணவமாகப் பேசியவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவரை பணி நீக்கம் செய்து, கைது செய்திருக்க வேண்டும். அத்தோடு அவருடைய இடத்தில் பிரிதொரு மாஜிஸ்ரேட்டை நியமித்து, சிலைகளை அகற்றி இருக்க வேண்டும். எதையும் செய்திட வில்லை.
       கே.கே.கே. நய்யாரைப் பொறுத்தவரை அவரை ஜனசங்கம்(இன்றைய இந்துத்துவ பாரதீய ஜனதா கட்சியின் அப்போதைய வடிவம்) அரவணைத்துக் கொண்டது.
சிலைகள் எங்கே?
 வரலாற்றில் இன்னொரு உண்மை அனைவரின் கவனத்தையும் ஏய்த்து விட்டது. அந்த உண்மை.
       டிசம்பர் 6,1992 இன்போது பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது அதனுள்ளிருந்த சிலைகளைப் பற்றியது.
       பாபரி மஸ்ஜித் - ஐ இடித்தவர்கள் அத்துமீறித் தான் அந்த ஈனச் செயலில் ஈடுபட்டார்கள், என்பதே இன்றுவரை பிரச்சாரம் செய்யப்படும் செய்தி.
என்றெல்லாம் செய்திகளைச் சொன்னார்கள். ஆனால் ஒரு உண்மையை அப்படியே மறைத்து விட்டார்கள். அது, பாபரி பள்ளி வாசலுக்குள் 1949 இல் வைக்கப்பட்ட சிலைகள் பள்ளிவாசல் இடிக்கப்படும் போது என்னவாயிற்று எங்கே இருந்தன? அவை சேதப்படவில்லையா?
       இந்தக் கேள்வியை லிபர்ஹான் விசாரணையின்போது அனுபம் குப்தா (லிபர்ஹான் கமிஷனின் அதிகாரப் பூர்வமான வழக்கறிஞர்) அத்வானி, நரசிம்மராவ், சுஷ்மா சுவராஜ் - சாத்வி ரீதாம்பரா ஆகியோரிடம் கேட்டார். அவர்கள் யாரும் முறையாகப் பதில் சொல்லிட வில்லை.
       நரசிம்மராவ் வாயையே திறக்கவில்லை. என்னிடம் என்ன நீ கேள்வி கேட்பது? என்பது போலவே அவர் அனுபம் குப்தாவை பார்த்திருக்கின்றார்.
       அத்வானி கேள்விக்கான பதிலை விட்டு விட்டு கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கின்றார் ஆனால் ராம்லீலா விவகாரத்தில் - அதாவது பள்ளிவாசல் இடிப்பின் போது சிலைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதற்கான தெளிவான பதிலை அனுபம் குப்தா பதிவு செய்கின்றார், இப்படி !
       "பாபரி பள்ளிவாசல், இடிப்பு என்பது திட்டமிட்ட ஒரு செயல். இதில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு முழுமையாக ஒத்துழைத்தது. பள்ளிவாசலை இடிப்பதற்கு வெகு நேரத்திற்கு முன்பே உள்ளிருந்த சிலைகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்து விட்டார்கள். பள்ளிவாசல் இடிப்பு முடிந்தபின் சிலைகள் மீண்டும் கொண்டுவந்து வைக்கப்பட்டன. இத்தனையும் அரசின் உதவியோடு நடந்தன”
       வாசகர்கள் இங்கே ஓர் உண்மையைக் கவனிக்க வேண்டும்.
       பாபரி பள்ளிவாசல் இடிப்பில் கலந்து கொள்ள அங்கே குழுமிய கரசேவகர்கள். எல்லாம் மதியம் 4 மணிக்கு அவ்விடம் விட்டு அகன்று விட்டார்கள், ஏனெனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது பாபாரி பள்ளி வாசலின் மூன்று அறைகள் தான் சேதப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் அதற்குப் பின்னர் பள்ளி வாசலை இடித்துத் தரைமட்ட மாக்கியது அரசின் புல்டோசர்கள் தாம்.

1949 இல் சிலை வைக்கப்பட்டபோது நடந்த வஞ்சகம்
       1949 டிசம்பர் 22,23 ஆம் நாள் காலை 4 மணிக்கே சிலைகளை வைத்தார்கள். இதற்கு அன்றைய மாநில அரசுகள் உறுதுணையாக இருந்தன.
       1949 டிசம்பர் 22ஆம் நாள் இரவு இஷா தொழுகையை முடித்து விட்டு, முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் - திலிருந்து வெளியே வந்த சற்று நேரத்திற்கெல்லாம். காவல் துறையினர் பாபரி பள்ளிவாசலின் கதவுகளைத் தாங்கள் கொண்டு வந்த பூட்டுகளைப் போட்டுப் பூட்டினார்கள்.
       தொழுகைக்கு வந்த முஸ்லிம்கள் வரும்போதும், போகும் போதும், கற்களைக் கொண்டு தாக்கிய சங்கப் பரிவாரத்தினரை காவல்துறையினர் தடுக்கவில்லை. மாறாக சங்கப்பரிவாரத்தினரின் வன்முறையையே காரணங்காட்டி, பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகக் கூறி, பாபரி மஸ்ஜித் - ஐ பூட்டிவிட்டார்கள்.
       ஆனால் காலையில் பஜர் தொழுகைக்குப் போனவர்கள் பூட்டுத் தொங்குவதைப் பார்த்து மலைத்து நின்றார்கள். நீதி மன்றங்களை அணுகினார்கள். இன்றளவும் நீதி கிடைக்கவில்லை
பாப்ரி மஸ்ஜித் இதுவரை (சுருக்கமாக ):
கி.பி. 1528: முகலாய மன்னர் பாபரிடம் பணியாற்றிய மீர்பாகி அயோத்தியில் மசூதியைக் கட்டினார்.
கி.பி. 1853: இந்த இடத்தில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இருந்தது என்றும்இது ராமர் பிறந்த இடம் எனவும் இந்துக்கள் உரிமை கொண்டாடினர். அயோத்தியில் இப்பிரச்சனை தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதலில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
கி.பி. 1857: மசூதி இருந்த இடத்தின் ஒரு பகுதியை இந்து சமயத் துறவிகள் கைப்பற்றி ஆலய வழிபாட்டை நடத்தினர்.
கி.பி. 1859: வழிபாட்டுத் தலங்களைப் பிரிக்கும் வகையில் சுற்றுச் சுவரை அப்போதைய பிரிட்டிஷ் அரசு கட்டியது.
கி.பி. 1934: இந்தியா முழுவதும் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. பாபர் மசூதியின் ஒரு பக்க சுற்றுச் சுவரும் மேல் பகுதியும் சேதப்படுத்தப்பட்டன.
கி.பி. 1949: மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ராமரின் சிலையை அங்கு வைத்தனர். இதையடுத்து இப்பகுதியை சர்ச்சைக்குரிய இடமாக அரசு அறிவித்து பூட்டிவிட்டது.
கி.பி. 1983: ராமர் பிறந்த இடத்தை (?) மீட்டுஅங்கு ராமர் ஆலயம் கட்டுவதற்கான குழுவை விசுவ இந்து பரிசத் இயக்கம் உருவாக்கியது. இதற்காக எல்.கே. அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடைபெற்றது.
கி.பி. 1986: பாபரி மஸ்ஜித் தலத்தின் வாயிற்கதவின் பூட்டைத் திறந்து இந்துக்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்குமாறு பைசாபாத் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் பாபர் மசூதி செயல்கமிட்டிஅமைக்கப்பட்டது.
கி.பி. 1989: மசூதிக்கு அருகில் ராமர் கோயில் கட்டுவதற்கான சிலைவழிபாட்டுக்கு முந்தைய ராஜீவ் காந்தி அரசு அனுமதி வழங்கியது. அங்கு ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
கி.பி. 1990: ராமர் கோயில் கட்டும் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அத்வானி ரத யாத்திரை நடத்தினார்.
அயோத்தியில் ஒரு லட்சம் கரசேவகர்கள் திரண்டனர். சர்ச்சைக்குரிய இடத்தைத் தகர்க்க முயற்சித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 30 பேர் உயிரிழந்தனர்.
கி.பி. 1992: ஜூலை மாதம் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் துவங்கின.
கி.பி. 1992: டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அங்கு தற்காலிக ராமர் கோயில் அமைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
கி.பி. 1993: பாபர் மசூதி இடத்தைச் சுற்றியிருந்த 67 ஏக்கர் நிலத்தை முந்தைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு கையகப்படுத்தியது. அங்கு ராமனின் வரலாறு பற்றி கதாகலாட்சேபம் நடத்தும் பூங்கா அமைக்கத் திட்டமிட்டப்பட்டது.
கி.பி. 1994: அரசு கையகப்படுத்திய இடத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் எனவும் அது தீர்ப்பளித்தது.
கி.பி. 2002 ஜனவரி: ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளப் போவதாக விசுவ இந்து பரிசத் இயக்கம் அறிவித்தது.
கி.பி. 2002 பிப்ரவரி 16: சர்ச்சைக்குரிய அயோத்திப் பிரச்சினைக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பே சரியான தீர்வாக அமையும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். நீதிமன்றத் தீர்பபுக்குக் கட்டுப்படுவதாக விசுவ இந்து பரிசத்தும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைப்பும் அறிவித்தன.
கி.பி. 2002 மார்ச் 6: அயோத்தி வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துமாறு அலாகாபாத் உயர்நீதி மன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
கி.பி. 2002 மார்ச் 10: பாபர் மசூதி இடத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பிவிட்டு பூஜை நடத்த அனுமதிக்கலாம் என்ற காஞ்சி சங்கராச்சாரி முன் வைத்த ஒரு திட்டத்தை இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் நிராகரித்தது.
கி.பி. 2002 மார்ச் 11: அயோத்தியில் பூஜை நடத்துவதில் நீதிமன்றத் தீர்ப்புப்படி மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.
கி.பி. 2002 மார்ச் 13: அயோத்தியில் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அங்கு பூஜையோ இதர நிகழ்ச்சிகளோ நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கி.பி. 2010 செப்டம்பர் 30: தீர்ப்பு என்கிற பெயரில் பள்ளியின் இடத்தை மூன்று பங்காக பிரித்து,முஸ்லிம்களுக்கு 1 பகுதியை தருவது என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது.அதை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டு இன்றளவும் தீர்ப்பு இல்லாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.

SOURCE:-

*பாபரி மஸ்ஜித் - இதுவரை வெளிவராத உண்மைகள் -மு.குலாம் முஹம்மது

*பாபரி மஸ்ஜித் வழக்கும் மத்தியப் புலனாய்வுத்துறையின் மெத்தனப் போக்கும் -  மு.குலாம் முஹம்மது

*பல்வேறு இணைய தள தேடல் 

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment